சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஓபிஎஸ்-ன் வலது கையாக செயல்பட்டு வந்தவருமான கோவை செல்வராஜ் இன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அ.தி.மு.க செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.கோவை செல்வராஜ், ஒபிஎஸ், இபிஎஸ் இடையேயான மோதலை தொடர்ந்துரு ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றார். ஓபிஎஸ்-ன் வலதுகரமாக இருந்து, எடப்பாடி தரப்புக்கு பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில், அவருக்கும் ஓபிஎஸ்-க்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதல் காரணமாக, கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, அவர் திமுகவுக்கு விலை போய்விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது அதை உறுதிப்படுத்தும் நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த கோவை செல்வராஜ், திமுகவில் இணைந்தார்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ் , திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், இலவச பேருந்து பயண சலுகை, கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி உள்ளிட்ட திட்டங்கள் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மின்சார தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை புகழ்ந்தார். மேலும், அதிமுக தற்போது கம்பெனி போல் மாறி விட்டதாகவும், திமுக அரசை விமர்சிக்க அதிமுகவினருக்கு தகுதி இல்லை என்றும் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த ஓபிஎஸ்-ன் ‘வலதுகை’ கோவை செல்வராஜ் திமுகவில் சேர முடிவு?