சென்னை:

துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பதவி கேட்டு பாஜக தலைவர்களை சந்தித்து வருவதாக டிடிவி ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் ஓபிஎஸ் வாரணாசி சென்று, மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது பாஜக தலைவர் அமித்ஷா, மற்றும் மோடியை தனியாக சந்தித்து பேசினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய தங்க. தமிழ்செல்வன்,  பிரதமர் மோடியை வாரணாசியில் வைத்து நேரில் சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனக்கு ஆளுநர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கடந்த 18ந்தேதி தேர்தல்முடிவடைந்தவுடன் தனது மகன் ரவிந்திரநாத் உடன்  காசி  சென்ற ஓபிஎஸ் அங்கு பிரத்யேக வழிபாடு நடத்தினார். அதைத்தொடர்ந்து  பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து பேசினார்.

தமிழக துணை முதல்வர் தனியாக சென்று பிரதமர் மோடியை சந்ததித்தது குறித்து திமுக உள்பட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன.

இந்த நிலையில்,  சொந்த காரியமாக வாரணாசியில் இருந்த போது பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை சந்திக்க நேர்ந்தது என ஓபிஎஸ் விளக்கம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் கட்சியான  அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்திப் பேசினார்.  அப்போது, வாரணாசியில் ஓபிஎஸ் மோடியை சந்தித்தபோது, தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மக்களவை உறுப்பினர் பதவி வேண்டியும், தனக்கு ஆளுநர் பதவி கோரியும் வேண்டினார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் ஜெயலலிதா இருந்திருந்தால் ஓ. பன்னீர்செல்வம் இப்படி வாரணாசி வரைக்கும் சென்றிருக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.