சென்னை; அதிமுக வரலாற்றில் ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி என்றும் சாத்தான் வேதம் ஓதக்கூடாத என்றும் எடப்பாடி ஆதரவாளரான அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.
அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டு முடிவடைந்து, இன்று 51வது ஆண்டு தொடங்கி உள்ளது. இதையொட்டி, சென்னை உள்பட மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கட்சியின் தொடக்க நாளை கொண்டாடி வருகின்றனர். சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில், அதிமுக இடைக்கால பொது செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர், எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓபிஎஸ் தரப்பினரை கடுமையாக சாடினார்.
பராசக்தி படத்தின் வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருக்கும் ஓபிஎஸ், சட்டசபையில் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசி வருகிறார். அதிமுகவின் சட்டவிதிகளை மாற்றக் கூடாது என்று சொல்லும் ஓபிஎஸ், 2017ல் பதவி லாபத்திற்காக மாற்றியவர். பொதுச்செயலாளர் பதவியை ரத்து, கட்சியில் இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கொண்டு வந்தவர்.
அதிமுக தொடங்க வேண்டும் என்பதற்கான நோக்கம் திமுகவை எதிர்க்க வேண்டும், விரட்ட வேண்டும் என்பதற்காக தான். 50 ஆண்டு கால கட்சி வரலாற்றில், ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி. அவருக்கு அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதா, சட்டவிதிகள் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.
சாத்தான் வேதம் ஓதக் கூடாது. அதிமு சட்டவிதிகளை மாற்றலாமா, மாற்றினால் எம்ஜிஆரின் ஆன்மா மன்னிக்காது என சொல்வதற்கு தகுதி வேண்டும். அந்த தகுதி ஓபிஎஸ்-க்கு இல்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை முடக்கினார். அதனால் இரட்டை இலை முடக்கப்பட்டது. அப்படி இருக்க, அதிமுகவை பற்றி பேச தகுதி அவருக்கு என தகுதி இருக்கு, தொண்டனுக்கு இருக்கும் உரிமை கூட ஓபிஎஸ்-க்கு இல்லை என கடுமையாக விமர்சித்ததுடன் அதிமுக வரலாற்றில் ஓ.பன்னீர்செல்வம் ஓர் கரும்புள்ளி என்று கூறினார்.