சென்னை
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மனிமண்டபத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தமிழ்த்திரை உலகின் மூத்த நடிகரான சிவாஜி கணேசன் ரசிகர்களால் நடிகர் திலகம் என போற்றப்படுபவர். கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி மரணம் அடைந்தார். சிவாஜிகணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்ட அரசிடம் இடம் கேட்கப்பட்டது. அதற்காக அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் சுமார் 28 ஆயிரத்து 300 சதுர அடி நிலத்தை ஜெயலலிதா தலைமையிலான அரசு ஒதுக்கியது. அதற்கான பூமி பூஜைக்குப் பின் மணிமண்டபம் எழுப்பும் பணி நின்று போனது.
சென்ற 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி சட்டசபையில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அதே இடத்தில் கட்டப்படும் என தெரிவித்தார். அதை தொடர்ந்து மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜிகணேசன் சிலை மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தை இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். மணி மண்டபத்தில் உள்ள சிவாஜியின் படத்துக்கு ஓ பி எஸ் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேடையில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் கமல் மற்றும் ரஜினிகாந்த் அமர்ந்திருந்தனர். சமீப காலமாக கமல் தனது டிவிட்டரில் ஆளும் கட்சியை விமர்சிப்பதும், ரஜினி அரசைப் பற்றி சிஸ்டமே முழுவதும் கெட்டுவிட்டது என சொன்னதும் தெரிந்ததே.
விழாவில் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோருடன் சிவாஜி குடும்பத்தை சேர்ந்த ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு ஆகிய்யொரும், நடிகர்கள், ராஜேஷ், விஜயகுமார், ராதிகா, நாசர், சரத்குமர், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோரும் மற்றும் பல நடிகர்களும் ரசிகர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.