சென்னை: அண்ணாமலையோடு கைகோர்த்த ஓபிஎஸ்க்கு அதிமுக இணைப்பு குறித்து பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என அதிமுக தலைவர் களான   கே.பி.முனுசாமி, கு.ப.கிருஷ்ணன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளார்.

நடைபெற்ற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல துண்டுகளாக உடைந்து சேர்ந்து மீண்டும் உடைந்து தேர்தலை சந்தித்தது.  அதுபோல பாஜக உடனான கூட்டணியையும் அதிமுக முறித்தது. ஆனால், அதிமுகவில் இருந்து பிரிந்த, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இருந்தாலும், அதிமுக, அமமுக, ஓபிஎஸ் என யாரும் வெற்றிபெறாத அவலம் ஏற்பட்டது.  அத்துடன்,  பாமக 2ஆம் இடத்தை பிடித்ததால் அதிமுக 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதே போல், ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும், தேனியில் போட்டியிட்ட டிடிவி தினகரனும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2ஆம் இடம் பிடித்தனர். அதிமுகவை, கன்னியாகுமரி, புதுச்சேரியில் நான்காம் இடத்திற்கு தள்ளியது நாம் தமிழர் கட்சி. மேலும்,  முதன்முறையாக  7 மக்களவைத் தொகுதிகளில்  அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். இதனால் எடப்பாடி தலைமையிலான அதிமுகமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில்,  சசிகலா,  அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும், அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம். வரும் காலம் நமக்கானது. அனைவரும் வாருங்கள் வெற்றி அடைவோம், புதிய சகாப்தம் படைப்போம்! என சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து,  முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றிணைய வேண்டும், கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் தயாராகுவோம் என அழைப்பு விடுத்துள்ளார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் கருத்துதெரிவித்து உள்ளனர். செய்தியாளர்களை சந்தித்த   அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி,  அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று சொல்வதற்கு ஓ.பன்னீர்செல்வதிற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை என்று கூறியதுடன்இ,  அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது அதற்கு முக்கிய கருவியாக இருந்து அதிமுகவிற்கு மேலும் மேலும் சோதனைகளை கொடுத்தவர் ஓ பன்னீர்செல்வம்.

அதிமுக தொண்டர்கள் கோயிலாக வணங்கும் அதிமுக தலைமை கழக அலுவலகத்தை குண்டர்கள் உதவியோடு சூறையாடிச் சென்றவர் ஓ பன்னீர்செல்வம். அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையோடு கைகோர்த்துக்கொண்டு தன் சுயநலத்திற்காக அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் தான் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுக கட்சி முடக்க முயற்சித்த ஓ பன்னீர்செல்வத்திற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுப்பதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை.

சசிகலா அழைப்பு விடுத்து 24 மணி நேரம் கடந்தும் யாராவது சென்று இருக்கிறார்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக 2019 ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் கூடுதலாக 2 சதவீதம் பெற்றுள்ளது. ஆனால், திமுக 6 சதவிகிதம் வாக்கை இழந்துள்ளது . 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்று எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்கும்” என்றார் .

அதுபோல செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்,  1975-ல் அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டபோது, சிக்கல் தீர்ப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி எம்.ஜி.ஆர் தீர்வு கண்டார் . இப்போது அதேபோன்று ஒரு குழுவை ஏற்படுத்தி உரிய தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் கொள்கையை புரட்சித் தலைவர் வகுத்ததார். கட்டுப்பாடுகளை புரட்சி தலைவி வகுத்தார். அதன்படிதான் செயல்பட வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி வைத்த ‘ஜெ’ அவர்களே இனி அவர்களுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். கட்சியை வளர்த்த வர்களுக்குதான் தோல்வியின் வலி தெரியும். எனக்கு வலிக்கிறது. அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல. ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம். கட்சியை ஒன்றுபடுத்தும் சக்தி படைத்தவர்கள் யாராயினும், அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார். சசிகலா 2 ஆண்டுகளாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதை தவிர இணைப்பு முயற்சிக்கு வேறு என்ன நடவடிக்கை எடுத்தார்? டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்கி சென்றுவிட்டார். அவர் எப்படி அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து பேச இயலும்  என கேள்வி எழுப்பினர்.

அதுபோல செய்தியாளர்களிடம் பேசிய கோவை எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி, அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்றவர், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது விலகியதுதான் என்றும், அண்ணாமலை அதிகமாக பேசியதால்தான் கூட்டணி முறிவு ஏற்பட்டதாகவும், இதற்கு அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் காரணம் அல்ல என்று தெரிவித்ததுடன், ஓபிஎஸ் கோரிக்கையையும் நிராகப்பதாக தெரித்தார்.