அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது ஆதரவாளர்களோ, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இருந்து நீக்கினாலும், அவரது பல லட்சம் ஆதரவாளர்கள் இன்னும் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர். ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு அதிமுக என்பது ரத்தத்தில் ஊறிப்போன கட்சி. அதை யாராலும் பிரிக்க முடியாது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை, பிரதானவழக்கில் விசாரணை நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறி நாங்களும் அதிமுகத்தான் என பேசி வருகின்றனர்.
இதற்கிடையில், அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, இனிமேல் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால், தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நிலவும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால், மாநில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக ஒருபுறமும், பாஜக ஒருபுறமும் போராடிக்கொண்டிருக்கிறது. பாஜக அணிக்கு ஆதரவாக, ஓபிஎஸ் தரப்பு மற்றும் டிடிவி தினகரன் அணிகள் செயல்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் திடீரென கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தனத அணியின் பெயரோ, கட்சியின் பெயரோ அறிவிக்கப்படாத நிலையில், வெறுமேன அவர் அழைப்பு விடுத்துள்ளது, யாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை எழும்பூர் வேனல்ஸ் சாலை, ஆல்பர்ட் திரையரங்கம் அருகில் உள்ள ஃபைஸ் மஹாலில் வரும் 29-02-24 விழாக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என, ஓபிஎஸ் லெட்டர் பேடில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.