சென்னை:  பிரதமர் மோடி சென்னையில் பங்கேற்கும் பாஜக பொது கூட்டத்தில்  பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை நந்தனம் மைதானத்தில் இன்று மாலை பாஜக சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தேர்தல் கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்சிறார்கள்.  ஏற்கனவே  இரண்டு நாட்கள் தமிழகத்தில் பிரதமர் மோடி இருந்தபோதும் பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை.  இருந்தாலும் தேனியில் ஓபிஎஸ் பாஜக சின்னத்தில் போட்டியிடுவார் என தகவல்கள் பரவின. அதுபோல ஓபிஎஸ் ரவிந்திரநாத்தும் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் என கூறியிருந்தார். இதனால், சென்னையில் இன்று மாலை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில்  ஓ. பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ்மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில், உயர்நீதி மன்றத்தில் இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு வர உள்ளது.  இதன் காரணமாக, சென்னை பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொது கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரதமர் மோடி கலந்துகொண்ட பல்லடம், திருநெல்வேலி  பாஜக பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமே மேடையில் பங்கேற்றனர். குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். அவர்களே இன்றைய பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று   சொந்த ஊரான தேனியில் உள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறும்போது,  பிரதமர் மோடி கூட்டத்தில் பங்கேற்க நாங்கள் எதுவும் கேட்கவில்லை. அடுத்த மூன்று தினங்களில் பாஜக உடன் கூட்டணி குறித்து முடிவு தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். இதுபோல், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.