ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழுந்தது. முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்ற நிலையில், பொதுச்செயலாளராக சசிகலா காய் நகர்த்தி வருகிறார்.
அ.தி.மு.கவின் இரண்டாம் கட்டதலைவர்கள், சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும்படி கோரிக்கை வைத்தார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், சசிகலாவே முதல்வராக வேர வேண்டும் என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு செயற்குழு கூட இருக்கிறது. இதில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதற்கிடையே, முதல்வர் ஓ.பி.எஸ்., சசிகலாவுக்கு எதிராக அணி சேர்க்கத்துவங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக உலவும் செய்தி இதுதான்:
“ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களிடம் சிலர் இப்போது ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக கேன்வாஸ் செய்து வருகிறார்கள். “இதுவரை நாம் சம்பாத்தித்ததை எல்லாம், அம்மா பெயரச் சொல்லி, சசிகலாவே பிடுங்கிக்கொண்டார். தவிர நம்மை அடிமையிலும் அடிமையாக நடத்தினார்.
இனியும் அப்படி நடக்கக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருந்து ஓ.பி.எஸ்ஸை ஆதரிக்க வேண்டும். மீதி இருககும் ஆட்சிக் காலத்தில் நியாயமான(!) கமிசன் கொடுத்தால் போதும்.
ஓ.பி.எஸ்ஸுக்கு மத்திய பாஜக அரசின் ஆதரவு இருக்கிறது. ஆகவே நாம் சசிகலாவுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ பயப்பட வேண்டியதில்லை. தவிர, சொத்துக்குவிப்பு வழக்கு விரைவில் வரப்போகிறது. சசிகலாவும் மற்றவர்களும் சிறைக்குச் செல்லப்போவது உறுதி.” என்று இவர்கள் கூறி எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு தெரவித்து வருகிறார்கள்.
ஏற்கெனவே சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது கடும் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏக்கள் வெளியில் ஏதும் சொல்ல முடியாத நிலையில் இருந்தார்கள். தற்போது தங்கள் ஆத்தரத்தை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைத்திருப்பதால், பெரும்பாலான.. அதாவது 90 சதவிகித எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
அதே போல அ.தி.மு.க. எம்.பிக்களில் பெரும்பாலோரும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள்.
அதிகார பலம் கொண்ட, எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ். பக்கம் வந்ததால் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை வளைப்பது எளிது என்பதால், முதலில் இந்த கேன்வாஸ் நடந்தது.
ஆனால், கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே சசிகலா எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் தகுந்த தலைமை இல்லாததால் அவர்கள் வெளிப்படையாக அணிதிரளவில்லை.
இப்போது ஓ.பி.எஸ். தயாராக இருப்பதால் அவரது தலைமையின் கீழ் இயங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம், “பொதுக்குழு கூடும் வரை அமைதியாக இருங்கள். கூட்டத்தில் பார்த்துக்கொள்ளலாம்” என ஓ.பி.எஸ். சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனாலும் சில அ.தி.மு.க. பிரமுகர்கள், இப்போதே “ஓ.பி.எஸ்.தான் பொதுச்செயலாளராக வரவேண்டும்” என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
விழுப்புரம்மாவட்டம், அவலுார்பேட்டை கடை வீதியில், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து, நகர அ.தி.மு.க., செயலர், சாதிக் பாஷா பேனர் வைத்துள்ளார்.
பல இடங்களிலும், முதல்வர் பன்னீர் செல்வமே, பொதுச்செயலாளா் பதவிக்கு வர வேண்டும் என, வலியுறுத்தி, பேனர்கள் வைப்பது மற்றும் போஸ்டர்கள் ஒட்டுவதும் நடந்தேறி வருகின்றன.
ஏற்கெனவே சசிகலா போஸ்டர்களில் அவரது உருத்தை கிழிப்பதும் நடந்து வருகிறது.
ஆகவே அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூடும் டிசம்பர் 29ம் தேதி ஓ.பி.எஸ்ஸே பொ.செ.வாக பொறுப்பேற்கும் நிலை ஏற்படும்” என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக உலவுகிறது.