சென்னை,
தமிழ்நாடு சட்டப்பேரவையின் அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெ.மறைவை தொடர்ந்து, சசிகலா தலையீடு காரணமாக அதிமுக இரண்டாக உடைந்தது. அதையடுத்து முதல்வராக இருந்த ஓபிஎஸ் பதவி விலகி தனி அணியாக நின்றார். அவருக்கு ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று உச்சநீதி மன்றம் அறிவித்ததை தொடர்ந்து, சசி சிறைக்கு செல்லும்போது, எடப்பாடியை முதல்வராகவும், டிடிவியை கட்சியின் துணைப்பொதுச் செயலாளராகவும் நியமித்தார்.
இந்நிலையில் சசிசகலா தரப்பினரின் தலையீடு காரணமாக எடப்பாடி தலைமையிலான அரசுக்கும் இடையே முட்டல் மோதல் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளுடன் ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி அணியோடு இணைந்து, அதிமுக பொதுக்குழுவை கூட்டி டிடிவி தினகரனை கட்சியில் இருந்து விலக்குவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் நடைபெற்ற தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று (3ந்தேதி) நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்தும், கட்சியின் செய்லபாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
அதைத்தொடர்ந்து, அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டார்கள். இந்த பட்டியலில் ஓபிஎஸ் ஆதரவாளர்களே அதிகம் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது தமிழ்நாடு சட்டமன்ற அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமனம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் பூபதி தனது செய்தி குறிப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவை முன்னவராக ஓபிஎஸ் இருந்தார். ஆனால், கட்சி இரண்டாக உடைந்ததும், அவை முன்னவராக மூத்த அமைச்சரான செங்கோட்டையனுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது, அவை முன்னவர் பதவி மீண்டும் ஓபிஎஸ் வசம் வந்திருக்கிறது.
வரும் திங்கட்கிழமை (ஜனவரி 8-ம் தேதி) தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர், கவர்னர் பன்வாரிலால் தலைமையில் நடைபெற உள்ள நிலையில், அவை முன்னவர் பதவி ஓபிஎஸ்-சுக்கு கொடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அவரால்தான் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும் என்றும், எதிர்க்கட்சியினரை சமாளிக்க முடியு என்றும் அவருக்கு அவை முன்னவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் கூறுகின்றனர்.