திருமங்கலம்.

மிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாஜகவில் இணைவது குறித்து கேட்டதற்கு எரிச்சல் அடைந்துள்ளார்.

கடந்த சில தினங்களாக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வருகின்றன. அதற்கு ஆதாரமாக அவர் காவி வேட்டி அணிந்துள்ள புகைப்படங்கள் வெளியாகின. சமூக வலை தளங்களில் இந்த செய்திகள் புகைப்படத்துடன் பலராலும் பரப்ப படுகின்றன..

நேற்று மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள், “நீங்கள் பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வெளி வருகின்றன. அது உண்மையா? நீங்க்ள் பாஜகவில் இணைகிறீர்களா?” என கேள்விகள் எழுப்பினர்.

இந்த கேள்வி ஓ பி எஸ்சுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. “இது ஒரு முட்டாள் தனமான கேள்வி” என பதிலளித்தார். மீண்டும் நிருபர்கள் விடாமல் அது குறித்து கேள்விகளை எழுப்பியதில் மேலும் கோபம் அடைந்தார்.

அவர் நிருபர்களிடம், “ஏற்கனவே பதில் சொல்லியும் மீண்டும் கேட்கின்றீர்களே, யார் உங்களை இப்படி கேட்க சொல்லி தூண்டி விடுவது? மதுரையில் மட்டும்தான் இது போல் செய்தியாளர்கள் இது போல கேள்விகள் எழுப்புகின்றனர். பாஜகவில் நான் இணைய உள்ளதாக வந்த செய்தி அடி முட்டாள்தனமான செய்தியாகும்.” என பதிலளித்தார்.

பன்னீர் செல்வத்துடன் இருந்த மற்ற அதிமுகவினரும் நிருபரிடம் அந்த கேள்விக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.