திருப்பதி

மிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அமைச்சர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட்டுள்ளார்.

தமிழக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவில் கடும் சர்ச்சை எழுந்தது.   கடந்த 2 மாதங்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கு இடையே இது தொடர்பாக மோதல் நிலவி வந்தது.

கடந்த 28 ஆம் தேதி அன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடந்த போது கடும் விவாதம் ஏற்பட்டும் முடிவு எட்டவில்லை.  அதன்பிறகு சமரசம் ஏற்பட்டு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.   இதன் பிறகு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஓ பி எஸ் வீட்டுக்குச் சென்று நன்றியைத் தெரிவித்தனர்.

இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எம் சி சம்பத், சரோஜா உள்ளிட்டோருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். விஐபி பிரேக் தரிசன நேரத்தில் இந்த வழிபாடு நடந்துள்ளது.

அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் கோவிலின் ரங்கநயகி மண்டபத்தில் பிரசாதங்கள் அளிக்கப்பட்டன.  அதன் பிறகு கோவிலின் முன்பு அவர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.  அத்துடன் பெரிய ஜீயர் மடத்துக்கு சென்று ஜீயரிடம் அவர்கள் ஆசி பெற்றுள்ளனர்.