பாட்னா :
ரணம் அடைந்த மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் உடல் டெல்லியில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் பாட்னா கொண்டு வரப்பட்டது.
பஸ்வானின் முதல் மனைவியின் மகள் ஆஷாதேவி, தனது கணவர் அனிலுடன் விமானநிலையம் வந்திருந்தார். ஆனால் பஸ்வானின் மகளையும், மருமகனையும் விமானநிலையத்துக்குள் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால், இருவரும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

பஸ்வானின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பீகார் துணை முதல்-அமைச்சர் சுஷில் குமார் மோடி, விமானநிலையத்துக்கு காரில் வந்திருந்தார்.  அவரது காரை வழிமறித்து பஸ்வானின் மகள் ஆஷா ,போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
“துக்க நிகழ்ச்சியில் கூட அரசியல் செய்கிறார்களே! இது நியாயமா?’’ என செய்தியாளர்களிடம் புலம்பி தள்ளினார், மருமகன் அனில். இவர், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி.கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
முதல் மனைவி ராஜ்குமாரியை விவாகரத்து செய்து விட்டு, பஸ்வான் கடந்த, 1983 ஆம் ஆண்டு ரீனா சர்மா என்ற விமானப்பணிப்பெண்ணை மணந்தார். அவர்களின் மகன் சிராக் பஸ்வான் தான், இப்போது லோக்ஜனசக்தி கட்சியின் தலைவராக இருக்கிறார்.
– பா.பாரதி