சென்னை:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜெயானந்த் திவாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஆளும்கட்சியான அ.தி.மு.க. தற்போது மூன்று அணிகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளரை ஒதுக்கும் முயற்சியில் மற்ற இரு அணிகளும் காய் நகர்த்தி வருகின்றன. ஓ.பி.எஸ், மற்றும் ஈ.பி.எஸ். தலைமையல் செயல்பட்டுவரும் அந்த அணிகள் இணையும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு பா.ஜ.க. வழிகாட்டிவருகிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு எதிராக நடத்த இருப்பதாக அறிவித்த போரட்டத்தை ஓ.பி.எஸ். ஒத்தி வைத்திருக்கிறார். முன்னதாக டில்லியில் பிரதரம் மோடியை எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தினகரன் தனது செல்வாக்கை காட்டுவதற்காக மதுரை மேலூரில் நேற்று பொதுக்கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தில் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்தும் மேடையில் அமரவைக்கப்பட்டார். இனி கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அப்போதே பேச்சு கிளம்பியது.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜெயானந்த், எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். அணிகளை கடுமையாக விமர்சித்தார். “ஓ.பி.எஸ். தனது சுய ஆதாயத்துக்காக டில்லி சென்று பிரமதரை சந்தித்தார். எடப்பாடி அணியிலிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் எங்களை எட்டப்பர் என்கிறார். அவர்தான் எட்டப்பர்.
ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டால் மட்டுமே இந்த அரசு நீடிக்கும். ஜெயலலிதா மரணம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி விரும்பினால் நீதி விசாரணைக்கு உத்தரவிடட்டும். அவரது சிகிசசையி்ன்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆதாரம் எங்களிடம் உள்ளன. எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும்தான் சசிகலாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று ஜெயானந்த் தெரிவித்தார்.
சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, டிடிவி தினகரன் ஆதிக்கம் அக் கட்சியில் பெருகியது. அதே நேரம் சசிலாவின் மற்ற உறவினர்கள் அரசியலில் வெளிப்படையாக ஈடுபடாமல் இருந்தனர். இந்த நிலையில் ஜெயானந்த் வெளிப்படையாக பேசியிருப்பது மீண்டும் அதிமுகவில் மன்னார்குடி குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தத்துவங்கியிருப்பதை வெளிப்படுத்துகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.