சென்னை: திமுகவின் பி-டீமாக இருந்து வரும் பன்னீர்செல்வம் ஈபிஎஸ் ஐ சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஈரோடு இடைத்தேர்தல் விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இபிஎஸ் அறிவித்த வேட்பாளர் தென்னரசு களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவு கேட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பும் ஆதரவு தரும் என கூறிய நிலையில், வேட்பாளர் பெயரை கூறாமல் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை ஆகியோர் சந்தித்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர். மனுவில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக கூறியுள்ளார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திமுகவின் பி-டீமாக இருந்து வரும் பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டியவர், எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.
இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பேன் என சொல்பவர்கள் தென்னரசு பெயரை சொல்ல மறுப்பது ஏன்? ஓபிஎஸ் கூறுவதே முரண்பாடு என்றவர், திமுகவின் பி-டீமாக செயல்பட்டு வரும் வரும் பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரால் இரட்டை இலையை முடக்க முடியவில்லை. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பு என விமர்சித்துள்ளார்.
மேலும் ஓபிஎஸ் குறித்த செங்கோட்டையன் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அது அவருடைய தனிப்பட்ட கருத்து, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால், இணைப்பு மட்டும் சாத்தியமில்லை என்றவர், திமுக சார்பு நிலைப்பாட்டை எடுத்துள்ள ஓபிஎஸ்-ஐ அதிமுக தொண்டர்கள் ஒருநாளும் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார்.