தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை காணவும் அவரது வாழ்த்துக்காகவும் அவருக்கு வாழ்த்து சொல்லவும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது ரசிகர்கள் சிலர் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்பு திரண்டனர்.

மணிக்கணக்காக காத்திருந்த ரசிகர்கள் “தலைவா…. தலைவா” என்று கோஷம் போட்டபடி இருந்தனர்.

இதனால் பொறுமையிழந்த ரஜினிகாந்தின் பக்கத்து வீட்டில் உள்ள வயதான பெண்மணி ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியே வந்து “நாளும் கிழமையுமா இப்படி இங்க வந்து வீட்டு வாசல் முன்னாடி நின்னு சத்தம் போட்டுக்கொண்டிருப்பதால் நல்ல நாளும் அதுவுமா நிம்மதியாக சாமி கூட கும்பிட முடியவில்லை” என்று அங்கிருந்த ரசிகர்கள் முன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து நீங்க எவ்வளவு நேரம் நின்னாலும் என் வீட்டு முன்னாடி தான் நிக்கணும் அவர் எந்தநாளிலும் தனது வீட்டுக்குள்ளோ வீட்டிற்கு அருகிலோ ரசிகர்களை அழைத்தது இல்லை. இனி எங்கள் வீட்டு முன்பும் தயவு செய்து நிற்காதீர்கள் என்று கெஞ்சாத குறையாக கேட்டார்.

இருந்த போதும் ரஜினி பிறந்தநாள், தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என அடிக்கடி போயஸ் கார்டன் வந்து ரஜினி வீட்டருகே நின்று கோஷம் போட்டு பழகிப் போன அவரது ரசிகர்கள் மட்டும் அங்கிருந்து நகருவதாக இல்லை என்பது போல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, “முக்கிய நாட்களில் ரசிகர்களை தனது கல்யாண மண்டபத்தினுள் அல்லது வேறேதேனும் தனிப்பட்ட இடத்தில் சந்திக்காமல்.. இப்படி சுற்றி உள்ள வீட்டாரை தொந்தரவு செய்வது ரஜினிக்கு சரியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.