டில்லி
வன்முறை அதிகரித்து வருவதால் குடியுரிமை சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற மோடி அரசுக்கு வலியுறுத்தக் கோரி எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜாமியா பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஐஐடி உள்ளிட்ட பல கல்வி நிலைய மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதையொட்டி இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் திமுக, இடது சாரிகள், திருணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது அவர்கள் வன்முறையை நிறுத்தக் குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற மோடி அரசை வலியுறுத்தக் கோரி மனு ஒன்றை அளித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் சந்திப்புக்குப் பிறகு சோனியா காந்தி, “பன்னிரண்டு வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான நாங்கள் அனைவரும் குடியரசுத் தலைவரைச் சந்தித்தோம். குடியுரிமை சட்ட திருத்தம் காரணமாக வடகிழக்கில் நிலவும் சூழல் தற்போது டில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
இத்தகைய கடுமையான சூழல். இன்னும் பரவுமோ என்கிற அச்சம் எங்களுக்கு உள்ளது. அமைதியான முறையில் நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் காவல்துறையின் நடவடிக்கை எங்களுக்கு மனத் துயரத்தை அளிக்கிறது. ஆகவே, இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம்.
டில்லியில் மட்டுமன்றி, நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் காவல்துறையினர் சிறிதும் இரக்கமற்ற முறையில் மாணவர்களைத் தாக்குகின்றனர். மாணவர்களின் ஜனநாயக உரிமைகளில் போராட்டம் நடத்துவதும் ஒன்றாகும்.
பாஜக அரசை நீங்கள் அனைவரும் பார்த்து வருகிறீர்கள். மோடி அரசுக்கு மக்களின் குரல்களை ஒடுக்கிவிட்டு சட்டம் இயற்றுவதில் ஈவு இரக்கம் இல்லை என்பது நன்கு தெரிகிறது. இந்தப் போக்கு மக்களும், எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை” எனத் தெரிவித்தார்.