டெல்லி: மழைக்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள், குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்க அனுமதி மறுப்பு தெரிவித்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான ஆகஸ்ட் 11-ம் தேதி வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் கன்னியக்குறைவாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வேதனை தெரிவித்த ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற மரபை மீறி மேஜைகள் மீது ஏறியும், கோஷங்களை எழுப்பியும், கோப்பு களை தூக்கி எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 எம்.பிக்களை சஸ்பெண்டு செய்து அறிவித்தார். அதன்படி, காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரண்டு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி. என மொத்தம் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த எம்.பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்தது.
இதைத்தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பிக்களும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது உள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. நாடாளுமன்றம் இன்று கூடியதும் 12 எம்.பி.க்கள் மீது விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அந்த கோரிக்கையை ராஜ்யசபா தலைவர சபாநாயகர் வெங்கையா நாயுடு நிராகரித்துவிட்டார்.
அப்போது, கடந்த மழைக்கால அமர்வின் கசப்பான அனுபவம் இன்னும் நம்மில் பெரும்பாலோரை ஆட்டிப்படைக்கிறது. கடந்த அமர்வில் என்ன நடந்தது என்பது குறித்த சீற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், சபையின் முன்னணி தலைவர்கள் வருத்தம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தேன், ஆனால், அதற்கான நடவடிக்கை தென்படவில்லை என வேதனை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன் எதிர்க்கட்சிக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.