டில்லி
விவசாய போராட்டத்தில் அரசை எதிர்ப்போரைத் தொடர்ந்து கைது செய்வதால் இந்தியா அமைதி ஆகாது என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.
டில்லியில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நடைபெறும் விவசாயிகள் போராட்டம் 80 நாட்களைத் தாண்டியும் தொடர்கிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு மறுத்து வருகிறது. கடந்த மாதம் 26 ஆம் தேதி அன்று நடந்த டிராக்டர் பேரணியில் காலிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து வன்முறை நடத்தியதாக டில்லி காவல்துறை கூறியது. இதற்குக் காரணமானவர் எனக் கூறி ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார்.
திஷா ரவியின் கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “உங்கள் உதடுகளுக்குப் பேச உரிமை உள்ளது. உயிருடன் இருக்கும் வரை உண்மை பேசுங்கள். ஆட்சியாளர்கள் மட்டுமே பயந்துள்ளனர். நாடு பயப்படவில்லை. இந்தியா அமைதியாக இருக்காது” என இந்தியில் பதிந்துள்ளார்.
கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் திருணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, “அரசின் தவறான கொள்கைகளை எதிர்ப்போரைக் கைது செய்வது ஒப்புக கொள்ள முடியாத ஒன்றாகும். பொய்ச் செய்திகளை பரப்பி வரும் பாஜக ஐடி உறுப்பினர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக ஏன் இப்படி இரட்டை சட்டத்தைப் பின்பற்றுகிறது” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியும் திஷா ரவியின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் மனோஜ் ஜா தாம் இந்திய ஜனநாயகம் கடுமையான பாதிப்பில் உள்ளதால் அதை எண்ணிக் கவலை கொள்வதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப சிதம்பரம் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா தனது டிவிட்டரில், “துப்பாக்கியுடன் உள்ளவர்கள் ஆயுதமற்ற ஒரு சிறு பெண்ணைக் கண்டு அஞ்சுகின்றனர். அந்த ஆயுதமற்ற பெண்ணின் மன தைரியத்தின் ஜுவாலைகள் நாடெங்கும் பரவி வருகிறது” என இந்தியில் பதிந்துள்ளார்.