பீகாரில், சிதறும் எதிர்க்கட்சி கூட்டணி : சி.பி.எம்.எல். கட்சியும் வெளியேறியது..
பீகார் மாநிலத்தில் வரும் 28 ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
அந்த மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சித் தலைமையில் ‘மெஹா கூட்டணி’’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் வலுவான அணியை ஏற்படுத்தி இருந்தன.
அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் முன் நிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திரா குஷ்வாலா தலைமையிலான ஆர்.எல்.எஸ்.பி. ஆகிய இரு கட்சிகளும், தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக  ஏற்க மறுத்து கூட்டணியில் இருந்து விலகி விட்டன.
ஜிதன் ராம் மஞ்சி, ஐக்கிய ஜனதா தளம் அணியில் ஐக்கியமாகி விட்டார். உபேந்திரா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், மெஹா கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) கட்சியும் நேற்று வெளியேறி விட்டது.
இது குறித்து அந்த கட்சியின் மாநில செயலாளர் குணால் வெளியிட்டுள்ள அறிக்கையில்’’ ஆர்.ஜே.டி. கட்சியுடன் நடத்திய தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை, தோல்வி அடைந்து விட்டது. எனவே முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் 30 இடங்களில் நாங்கள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்’’ என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய பீகார் பகுதியில் வலுவாக உள்ள சி.பி.எம்.எல்…கட்சியின் விலகல் எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
-பா.பாரதி.