அதானி நிறுவனம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்.

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன அறிக்கையைத் தொடர்ந்து இதுவரை கடந்த ஒருவாரத்தில் 8.22 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது அதானி நிறுவனம்.

மோசடியாக தனது நிறுவன பங்குகளின் மதிப்பை உயர்த்தி வங்கிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாகப் பெற்று மக்கள் பணத்தை ஏப்பம் விட்டுவருவதாக அதானி நிறுவனம் மீது ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது.

இதனையடுத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது வழக்கு தொடுக்கப்போவதாக அதானி நிறுவனம் கையை உயர்த்திய நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிரெடிட் சுவிஸ் எனும் நிதி மற்றும் வங்கித்துறை நிறுவனம் அதானி நிறுவன பங்குகளின் மதிப்பை பூஜ்ஜியமாக்கியது.

மதிப்பிழந்த அதானி நிறுவன பங்குகளை அடமானமாக வைத்து கடன் தருவது ஆபத்தானது என்று அது பரிந்துரைத்தது. இதனையடுத்து சிட்டி குரூப் வங்கி அதானி பங்கு பத்திரங்களை ஏற்றுக்கொள்வதில் இருந்து பின்வாங்கியது.

இதனால் ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது வழக்கு தொடுக்கும் அதானி நிறுவனத்தின் முடிவு கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், அதானி நிறுவன விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பிய நிலையில் அதுகுறித்து விவாதிக்க பாஜக அரசு வழக்கம்போல் மறுத்ததை அடுத்து இன்று நாடாளுமன்றம் முடங்கியது.

இதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்தாலோசித்தனர்.

இந்தக் கூட்டத்தில் வங்கிகளில் மக்கள் முதலீடு செய்த பணத்தை அதானி நிறுவனுத்துக்கு தாராளமாக தாரைவார்த்தது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான விசாரணை நடைபெற வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த விசாரணை குறித்து ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள வங்கிகளின் நஷ்டம் குறித்த விவரம் கேட்கிறது ஆர்.பி.ஐ…. டீலில் விடப்பட்ட அதானி…