
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் ஆளுநர் பன்வாரிலால் இன்று விருதுநகர் சென்றுள்ளார். அங்கு திமுக உள்பட கூட்டணி கட்சியினர் ஆளுநர் வருகையை எதிர்த்து கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று விருதுநகர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார். இன்று மதியம் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அங்குள்ள தேசபந்து மைதானத்தில், நடைபெறும் உணவு பொருள் கண்காட்சியில் கலந்து கொள்வதாகவும், அங்கு துப்புறவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும், பொதுமக்களிடம் இரு மனுக்கள் பெறப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் ஆய்வுக்கு திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தும், அவர் செல்லும் இடங்களில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில், இன்று விருதுநகர் சென்றுள்ள ஆளுநருக்கு, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் அவருக்கு கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
இந்த கருப்புக்கொடி போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கபாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ள அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகையின் பெயரும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரின் விருதுநகர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.