ரவுண்ட்ஸ்பாய் கேள்விகள்.. ராமண்ணா பதில்கள் 

 

ஆர்.கே. நகர்  தேர்தல் முடிவு போகும் பாதை குறித்து..?

தகவலை சுருக்கமாகச் சொல்வது குறித்து ஒரு சம்பவத்தை சாத்தூர் இலட்சுமணப் பெருமாள்  கதாகாலட்சேபம் செய்யும்போது இப்படி சுவாரஸ்யமாக கூறுவாராம்.

 

“விருதுநகர் மாவட்டம் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வந்த, உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் (குடந்தை நிலக்கிழார்) குளப்படிக்கட்டில் வழுக்கி விழுந்துவிட்டார். இத குறித்து தகவல் தெரிவிக்க, தன் பணியாளிடம் பின்வருமாறு சொல்லி அனுப்புகிறார்.

“திருக்குடந்தை திரு.திருலோக தாதாச்சாரி, திருத்தங்கல் திரு.நின்ற நாராயணப் பெருமாள் திருமுகம் சேவிக்க, திருக்கோவிலுக்கு வந்து திருக்கோவில் வளாகத்தில் இருக்கக் கூடிய திருப்படிக்கட்டுகளில் இறங்கி திருத்துழாய் பிடுங்கிறச்சே, திருக்குளத்துப் படிப் பாசிகள் வழுக்கி, திருக்குளத்தில் விழுந்து திருக்காலில் ஹீனமடைந்தார்னு என்று சொல்லிடு” என்கிறார்.

இரண்டுமுறை கேட்டுக் கேட்டுப் பார்த்த பணியாளிடம், “எப்படிச் சொல்வாய்? சொல்” என்றார் அந்த நிலக்கிழார்.

“சொல்லிடுறேன்.. சொல்லிடுறேன்..”. என்று சொன்ன பணியாள், பின்வருமாறு: சொல்லிக் காட்டினான்

“கும்பகோணத்துப் பார்ப்பான் குட்டையில விழுந்தான்னு சொல்லிடுறேன் சாமி!”

ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை போகும் நிலையைப் பார்க்கும்போது இந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

எத்தனை எத்தனை கருத்துக்கணிப்புகள், கட்டுரைகள், யூகங்கள் எழுதப்பட்டன.. ஒளிபரப்பப்பட்டன!

சுருக்கமாகச் சொன்னால்..

“அதிகம் கொடுத்தவர் அதிகம் பெற்றார்!”