திருச்சி: 2024ம்ஆண்டு ஜனவரி மாதம் 2ந்தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. மேலும், அன்றைய திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிலையில், அவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 9 மாவட்டங்களில் 130-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகம் பேருதவியாக இருக்கிறது. அப்பகுதியிலுள்ள கடைகோடி கிராமத்தைச் சேர்ந்த பலரும், தங்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரியாக வருவதற்கு இப்பல்கலைக்கழகம் முக்கிய காரணம். இப்பல்கலைக்கழகம் உருவாக்கிய முதல் தலைமுறை மாணவர்கள் ஆயிரமாயிரம். இவ்வாறு பட்டம் முடிக்கும் மாணவர்கள், தாங்கள் பயின்ற கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்ததற்கான சான்றிதழ்களை பெறுவது வழக்கம்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து பட்டமளிப்பு விழாவை நடத்த மாணவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் தரப்பிலிருந்து பட்டமளிப்பு விழா குறித்த அறிவிப்பு பல்கலைக்கழக இணையதளத்திலும், நாளிதழ்கள் வாயிலாகவும் வெளியிடப்பட்ள்ளது. அதன்படி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38 வது பட்டமளிப்பு விழா ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க 1,528 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கில், 600 மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பல்கலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்கள் பல்கலைக் கழக வளாக அரங்குகளில் அமரவைக்கப்பட்டு பட்டம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து, திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை இன்று அமைச்சர் கே.என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மேயர் அன்பழகன், அரசு அலுவலர்கள், விமானநிலைய அலுவலர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதையும் படிக்க: சென்னையை தாக்கும் அடுத்த பெரு வெள்ளம்: அன்புமணி தகவல் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளதை அமைச்சர் கே.என். நேரு உறுதிபடுத்தினார்.
முன்னதாக கடந்த 2019-ஆண்டு பிப். 10-ஆம் தேதி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடியில் புதிய முனையம் அமைக்கும் பணியை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார். இப் பணிகள் 2021-ஆவது ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடியும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பணிகள் தாமதமானது. இதைத்தொடர்ந்து, தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதால், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.