சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து, மேலும் தளர்வுகளை வழங்குவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். காலை 11 மணியளவில் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு நாளை 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், தியேட்டர்கள் திறப்பு, தனியார் பேருந்து போக்குவரத்து உள்பட மேலும் பல தளர்வுகள் அறிவிப்புடன் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாககூறப்படுகிறது. அண்டை மாநிலமான தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் 100 சதவிகித பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல ஆந்திராவில் 50சதவிகித பார்வையாளர்களுடன் இன்றுமுதல் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. அதனால், தமிழகத்திலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆலோசனையைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவார்.