சென்னை:
சென்னையில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த 3 மேம்பாலங்கள் நேற்று ஆர்ப்பாட்டமில்லாமல் அதிரடியாக திறந்து வைக்கப்பட்டது.
சென்னையில் வடபழனி சிக்னல், அமைந்தரை அண்ணாநகர் வளைவு மற்றும் ரெட்டேரி சந்திப்பில் உள்ள ஒரு பகுதி மட்டும் ஆகிய மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போக்குவரத்துக்கு திறந்துவிடாமல் மூடப்பட்டே இருந்தது.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதை தொடர்ந்தே திறக்கப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள 3 மேம்பாலங்களையும் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என்றும், இல்லையில் பாமக களத்தில் இறங்கி மேம்பாலங்களை நாங்களே திறந்துவிடுவோம் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, மேம்பாலங்கள் குறித்து அதிகாரிகள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை முதல், இந்த 3 மேம்பாலங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திடீரென திறந்துவிடப்பட்டன. அதிகாரிகளே இதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தனர்.
அதிமுக அரசில் எந்தவொரு திறப்பு விழா நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த பகுதி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும், திறக்கப்படும் பகுதியில் உள்ள அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் காணொளியில் தெரியுமாறு ஏற்பாடு செய்யப்பட்டு, முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்து வைப்பது வழக்கம்.
ஆனால் இந்த மூன்று மேம்பாலங்களும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பொதுமக்களுக்கும், அந்த பகுதி கட்சிக்காரர்களுக்கும் கூட தெரியாத வகையில், நேற்று சென்னையில் மழை பெய்துகொண்டிருந்த வேளையில், அதிகாலையிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்துக்கு வந்து போக்குவரத்து நடைபெறும் வகையில் மேம்பாலங்களை திறந்து வைத்துள்ளனர்.
இது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 3 மேம்பாலங்களும் ஒரே நாளில் திறக்கப்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.