தியேட்டர்களில் 100% பார்வையாளர்கள் அனுமதி தற்கொலை முயற்சி அல்ல, கொலை: நடிகர்கள் விஜய், சிம்புவுக்கு இளம் மருத்துவர் கடிதம்

Must read

சென்னை: தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி அல்ல, கொலை என்று நடிகர்கள் விஜய், சிம்புவுக்கு  இளம் மருத்துவர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் வைரலாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு தீர்வு காணப்படாத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது தொடர்பாக டாக்டர் ஒருவர் நடிகர்கள் விஜய், சிம்புக்கு கடிதம் எழுதி உள்ளார். அவரின் பெயர் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதி உள்ள கடிதம் சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது.

அதன் விவரம் வருமாறு: டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசுக்கு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாகவே உள்ளோம். என்னை போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக  இருக்கின்றனர்.

சுகாதாரத் துறை ஊழியர்கள் சோர்வாக உள்ளனர். போலீஸ் அதிகாரிகள் சோர்வாக இருக்கிறார்கள். தூய்மை பணியாளர்கள் சோர்வாக உள்ளனர். கொரோனா தொற்றுக் காலத்தில் நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரிய வில்லை.

எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சு விட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.

தொற்றுநோய் இன்னமும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் இறக்கிறார்கள். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என்பது தற்கொலை முயற்சி இல்லை கொலை. கொள்கையை வகுப்பவர்களோ ஹீரோக்களோ மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை.

பணத்திற்காக வாழ்க்கையை வர்த்தகம் செய்தல் போன்று இது ஒரு அப்பட்டமான பண்டமாற்று முறை. உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த தொற்று நோய் காலத்தில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வர முயற்சிக்கலாமே?

மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை. நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று அரவிந்த் அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article