அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கே முழு தகுதி இருக்கிறது என்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நேற்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் இணைந்து செயல்பட்டு, அவருடைய சிந்தனையை உள்வாங்கியிருப்பவர் சசிகலா.
ஜெயலலிதாவைப் போல கட்சியை ராணுவ அமைப்பைப் போல நடத்துவதற்கு சசிகலா பொதுச்செயலாளர் ஆவதுதான் ஒரே வழி. அதற்கு மாற்றுக் கருத்து அ.தி.மு.கவில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அ.தி.மு.கவை அழித்திட வேண்டுமென எண்ணம் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளே இந்த விவகாரம் தொடர்பாக வதந்திகளைப் பரப்புகின்றன. ஒரு புறம் ஜெயலலிதாவைப் பாராட்டி, இரங்கல் தெரிவித்துவிட்டு மறுபுறம் கட்சி சார்ந்த கோமாளிகளின் மூலம் வதந்திகளைப் பரப்புவதாக” ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.