நூற்றாண்டு பழமை வாய்ந்தது நீலகிரி மாவட்டம் குன்னூர் வழியே மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில்.

இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் போட்டி போட்டு செல்வது உண்டு.

இந்த ரயில் பெட்டிகளை மாற்ற தெற்கு ரயில்வே நிர்வாகம் தீர்மானித்ததை அடுத்து சென்னையில் உள்ள ஐ.சி.எப். ரயில் பெட்டி தொழிற்சாலையில் புதிதாக ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டது.

நீர்வீழ்ச்சி மற்றும் இயற்கை காட்சிகளை எளிதாக கண்டு ரசிக்கும் வகையில், பெட்டிகளின் இரு பக்கவாட்டிலும் அதிகளவு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது.

28 பெட்டிகளைக் கொண்ட ஊட்டி மலை ரயிலுக்குத் தேவையான புதிய பெட்டிகளின் ஒரு தொகுப்பு வந்தடைந்ததை அடுத்து மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே பர்னஸ் ஆயிலில் இயங்கும் இஞ்ஜின் மூலமும் குன்னூர் – ஊட்டி இடையே டீசல் இஞ்சின் மூலமும் இயக்கப்படும் இந்த ரயிலில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக விரைவில் புதிய பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு மே மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவை இணைக்கப்படவில்லை.

நேற்று மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெற்றிருப்பதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளதை அடுத்து, இந்த புதிய பெட்டிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.