டெல்லி: நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்  என செய்திகள் வெளியான நிலையில், முன்னுரிமை பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே இலவசம் என   மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டிவிட் போட்டுள்ளார்.


இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகின்றன. தமிழகம், டெல்லி உள்பட சில மாநிலங்களில் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக போடப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதே வேளையில், தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என கூறவில்லை என மத்தியஅரசு தெரிவித்தது.

ஆனால்,  இன்று  டெல்லியில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,  கொரோனா தடுப்பூசி  தொடர்பாக திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தவர், கொரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்ததாக தகவல்கள் பரவின.  ஊடகங்களும், அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என செய்திகள் வெளியிட்டன.

இந்த  நிலையில், முன்னுரிமை பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி இலவசம் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து   மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டிவிட் பதிவிட்டுள்ளார்.