சென்னை:  புதியதாக அமைய உள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு அந்த பகுதி கிராமக்கள், கடந்த 900 நாட்களை கடந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், தவெக கட்சி தலைவர்  நடிகர் விஜய் இன்று பரந்தூர் மக்களை சந்தித்து பேசுகிறார்.   இதற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளதுடன், ஓரு மணி நேரம் மட்டுமே மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி வழங்கி உள்ளது. அங்கு பலத்த கெடுபிடிகள் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் சென்னையின்  2-வது பெரிய  விமான நிலையம், அதாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பரந்தூர், தண்டலம், மகாதேவி, நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்து 100 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால், அந்த கிராமத்தை மையமாக வைத்து 900 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், யாரும் அங்கே செல்ல முடியாதபடி சுற்றிவரை காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தற்போது அங்கு நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அங்குள்ள மக்கள் கடும் கெடுபிடிகளுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. அந்த பகுதி கிராம மக்கள்  900 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த பகுதி மக்களை சந்தித்த, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். ஏற்கனபே தவெக பொதுக்குழுவில்  பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று அங்கு போராட்டத்தை முன்னெடுத்து வரும்  போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக அனுமதி கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகத்திடம், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மனு அளித்தனர்.

அதன்படி ஏகனாபுரம் மக்களை சந்திக்க விஜய்க்கு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் பல்வேடு கட்டுப்பாடுகளுடன்  அனுமதி அளித்துள்ளார். அதன்படி,  போலீசார் அனுமதி அளித்த இடத்தில் மட்டும்தான் போராட்ட குழுவினரை விஜய் சந்திக்க வேண்டும். அதிக கூட்டத்தை கூட்டக்கூடாது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களில் வரவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பை முடிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவிதமான நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது  என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.  இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி, பொது இடத்தில் நடத்தக்கூடாது என்று நிர்வாகிகளை காவல்துறை மிரட்டி உள்ளதாகவும், குறிப்பிட்ட  திருமண மண்டபத்தில்தான் நடத்த வேண்டும், மக்கள் அதிக அளவில் கூட்டக்கூடாது என கெடுபிடிகளை போலீசார் தெரிவித்து உள்ளனர். தவெக சார்பில் அங்குள்ள  அம்பேத்கர் திடலில் நடத்த அனுமதி கேட்ட நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததுடன், இதுதொடர்பாக பல மணி நேரம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இருந்தாலும் காவல்துறையினர் தங்களது கெடுபிடியை தளர்த்த முடியாது என்று கூறிவிட்டதால், அங்குள்ள  தனியார் மண்டபத்தில் மட்டுமே மக்களைச் சந்திக்க வேண்டும் என விஜய்க்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, இன்று மதியம்  12 மணி முதல் 1 மணி வரை மட்டுமே  நடிகர் விஜய் மக்களை சந்திக்க காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

காவல்துறை நிபந்தனைகள்

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.

தாங்கள் பரந்தூர் வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் கிராம மக்களை சந்திக்கும் நேரம் தாங்கள் கேட்டுக்கொண்டபடி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் உள்ள அரங்கின் கொள்ளத்தக்க அளவுக்கு மிகாமல் மட்டுமே மக்கள் பங்கேற்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு நலனைப் பேண போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

கிராம மக்களை சந்திக்கும்போது தங்களது கட்சியினரால் அல்லது ரசிகர்களால் பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் உள்பட பல கெடுபிடிகள் அரங்கேறி வருகிறது.