டில்லி:
ராணுவத்தில் பாதுகாப்பான தொலைதொடர்பு முறையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களை அலுவலக ரீதியிலான தொடர்புக்கு பயன்ப டுத்துவதை கட்டாயமாக்கப்படவுள்ளது. அதேபோல் பாதுகாப்பான இமெயில் தொடர்புகளையும் ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அரசின் தொடர்புகள் அனைத்தும் பாதுகாப்பனதாக இருக்க வேண்டும். பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் தகவல்களை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் தான் சேமித்து வைத்துள்ளன’’ என்றார்.
ராணுவம் தற்போது பாதுகாப்பான தரை வழி போக்குவரத்தை தான் பயன்படுத்துகிறது. எனினும், தற்போது இந்திய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் புதிய முடிவு மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஒரு அதிகாரி கூறுகையில், ‘‘தகவல் பாதுகாப்பு சட்டம் தொடர்பான பணிகள் ஏற்கனவே நடந்து வருகிறது. ராணுவம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இடையிலான தொடர்பு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஸ்மார்ட் போன்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படுவது தற்போது தான் முதன்முறையா கும். அரசு துறைகளுக்கு வழங்கப்படும் செல்போன்களில் சில குறிப்பிட்ட சிறப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என்று ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்படும்’’ என்றார்.
இமெயில் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘‘தேசிய தகவல் மையம் (என்ஐசி) மூலம் பிரத்யேக இமெயில் ஐடி மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு உருவாக்கப்படும். ஏற்கனவே இந்த முயற்சி சோதனை அடிப்படையில் சில மூத்த அதிகாரிகள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு சர்வர்களை தவிர்த்து இந்தியாவிற்குள் தகவல்களை சேமிக்க வேண்டும் என்பது தற்போதைய நோக்கமாக உள்ளது. தற்போது பயன்படுத்தபடும் டொமெயினில் உள்ளூர் மொழிகளையும் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.