மும்பை:

‘‘சோப்புகளில் கெமிக்கல் உள்ளது’’ என்ற விளம்பரத்தை ஒளிபரப்ப பதஞ்சலி நிறுவனத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

இந்துஸ்தான் யுனிலிவர் சார்பில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் சார்பில் ஒளிபரப்படும் ஒரு விளம்பரத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், தங்களது நிறுவன தயாரிப்புகளான பியர்ஸ், லக்ஸ், லைஃப்பாய், டெட்டால், டன் போன்ற சோப்புகளின் பெயர்களை வேறு வார்த்தைகளில் பயன்படுத்தி பதஞ்சலி நிறுவனம் ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பி வருகிறது.

அதில் லக்ஸை ஃப்ளக்ஸ் என்றும், பியர்ஸை டியர்ஸ் என்றும், லைஃப்பாயை லைஃப்ஜாய் என்றும், டெட்டாலை திட்டால் என்றும், டவ்வை க்ளவ் என்றும் விளம்பரத்தில் பயன்படுத்தி இவற்றில் கெமிக்கல் உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று இ ந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் கேட்டுக் கொண்டது.

இது தொடர்பாக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் பதஞ்சலி நிறுவனம் சார்பில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து இந்த விளம்பரத்தை வெளியிட தடை விதித்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை பதஞ்சலி நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.