டான் ப்ராட்மான் விளையாடிய ஒரே ஆசிய கிரிக்கெட் மைதானம் எங்குள்ளது தெரியுமா ?

Must read

 

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அனைவராலும் வர்ணிக்கப்படுபவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சர் டான் ப்ராட்மான்.

தான் விளையாடிய 52 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 6,996 ரன்கள் எடுத்து சராசரியாக ஒவ்வொரு போட்டியிலும் 99.94 ரன்கள் எடுத்துள்ளார், இதுவே உலக சாதனையாக உள்ளது.

1948 ம் ஆண்டு இங்கிலாந்து அணியுடனான ஆஷஸ் தொடரில் விளையாட சென்ற ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்த டான் ப்ராட்மான், இங்கிலாந்து பயணத்தின் இடையே இலங்கையில் நடந்த ஒரு காட்சிப் போட்டியில் இலங்கை லெவன் அணிக்கு எதிராக மூன்று நாள் போட்டியொன்றில் கலந்துகொண்டார்.

சர் டான் ப்ராட்மான்

கொழும்புவில் உள்ள பீ சரவணமுத்து ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டிக்கு மகாதேவன் சதாசிவம் இலங்கை அணியின் கேப்டனாக விளையாடினார், இந்த போட்டியில், டான் ப்ராட்மான் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

ஆடுகளத்தின் நீளம் குறித்து ஆஸ்திரேலிய அணி சந்தேகத்தை எழுப்பியதை தொடர்ந்து, அதன் நீளம் அளந்து பார்க்கப்பட்டது, அப்போது 22 கஜத்திற்கு பதிலாக 20 கஜ தூரமே இருந்தது தெரியவந்தது. பின்னர் ஆஸ்திரேலிய அணி பந்துவீசும் போது, 22 கஜ அளவை குறித்து அங்கிருந்து பந்துவீசினர் என்பது இந்த போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், தென் ஆப்ரிக்கா, நியூஸிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் உள்ளிட்ட நாடுகளிலும் டான் ப்ராட்மான் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆடுகளத்தை சீரமைத்து சுத்தம் செய்யும் பணியை அருள்மேரி என்பவர் மேற்கொண்டார், இவரே உலகின் முதல் பெண் ஆடுகளை சீரமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பீ சரவணமுத்து ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்டு மகாதேவன் சதாசிவம் பெயரில் உள்ள பார்வையாளர் மாடத்தில், சர் டான் ப்ராட்மானுடன் மகாதேவன் சதாசிவம் டாஸ் போட செல்லும் படம் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article