சென்னை: நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க.வுக்கு பயம் வந்து விட்டது என , பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது என பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

தமிழக சட்டசபை இன்று கூடியதும், கேள்வி நேரம் முடிந்ததும், அதிமுக தரப்பில், திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர்மீது கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்க எடப்பாடி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையினுள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, கண்டிக்கின்றோம்… கண்டிக்கின்றோம்.. சபாநாயகரை கண்டிக்கின்றோம்.. மு.க.ஸ்டாலினை கண்டிக்கின்றோம் என முழக்கமிட்டனர்.
இதனை தொடர்ந்து பேரவை வளாகத்தில், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அமைச்சரவை மீதான நம்பிக்கை போய்விட்டது என்று கடுமையாக சாடினார். விதிகளை மீறி செயல்படும், 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி விதி 72-ன் கீழ் சபாநாயகரிடம் கடிதம் அளித்தோம். ஆனால், அதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்து வருகிறார். இதனால், சபாநாயகரை கண்டித்து, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். என்றார்.
தொடர்ந்து பேசியவர், பேரவையில், கடந்த காலங்களில் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் பலமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறியவர், தற்போதைய பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையில் மாநிலத்தில் நிலவக்கூடிய பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி வருகிறோம் என்றவர், அ.தி.மு.க. ஆட்சியில் ஜீரோ ஹவரில் பேச பல முறை தி.மு.க.விற்கு அனுமதி அளித்தோம், ஆனால், இன்று எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், அதிமுக பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது என்று விளக்கம் அளித்தவர், டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமி என்றுதான் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார் என்று தெரிவித்தார்.
மேலும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிப்பதாகத்தான் கூறினோம் என்று விளக்கம் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க.வுக்கு பயம் வந்துட்டது. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால், அவர்களுக்கு எரிச்சல், என்று கூறியவர், எங்களது கூட்டணி வலுவான கூட்டணியா? வலு இல்லாத கூட்டணியா? என்பது தேர்தலின் போது தான் தெரியும். தேர்தல் நெருங்குவதால் மாநில சுயாட்சி குறித்து பேசி தி.மு.க. அரசு திசை திருப்புகிறது என்றார்.