டில்லி:

‘‘தற்போது வரை 50 சதவீத பான் கார்டுகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்க மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு கால அவகாசம் வழங்கியது. தற்போது இதற்கு இன்னும் 20 நாட்களே உள்ளன.

இந்நிலையில் இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவா பிரதாப் சுக்லா லோக்சபாவில் பேசுகையில், ‘‘கடந்த மார்ச் 5ம் தேதி வரை 16 கோடியே 65 லட்சத்து 82 ஆயிரத்து 421 பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. மார்ச் 2ம் தேதி வரை 8,779.65 லட்சம் வங்கி நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது’’ என்றார்..

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 32 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரத்து 653 பான் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில கடைசி நாள் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் 50 சதவீத பான் கார்டுகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் மற்றொரு கேள்விக்கு நிதியமைச்சகம் அளித்த பதிலில், ‘‘ 2017ம் ஆண்டு ஏப்ரல் வரை பொதுத் துறை வங்கிகளில் 92 கோடியே 45 லட்சத்து 6 ஆயிரத்து 506 நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள் உள்ளன. தனியார் வங்கிகளின் கணக்கு விபரம் கைவசம் இல்லை. பொதுத் துறை வங்கிகளின் 94 சதவீத கணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தது.