புபனேஷ்வர்: வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விபரத்தில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு, ரூ.63.87 கோடி சொத்துக்கள் இருந்தாலும், கைவசம் ரொக்கப் பணமாக ரூ.25,000 மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து, ஒடிசா மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. முதல்வர் நவீன் பட்னாயக் ஹிஞ்சிலி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்தான் மேற்கண்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அவரிடம் 1980ம் ஆண்டு மாடலைச் சேர்ந்த ஒரு அம்பாசிடர் கார் உள்ளதாம். மேலும், தனது பிற அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து 4 முறை வென்று, கடந்த 20 ஆண்டுகளாக, ஒடிசா முதல்வர் பதவியில் தொடர்ச்சியாக அமர்ந்திருக்கிறார் நவீன் பட்னாயக். தற்போது, 5வது முறையும் வென்று, முழு ஆட்சி காலத்தையும் நிறைவுசெய்தால், முன்னாள் மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசுவின் (அதிக கால முதல்வர்) சாதனையை இவர் முறியடிக்கலாம்.

– மதுரை மாயாண்டி