தூத்துக்குடி
ஆன்லைனில் கார் ஆடியோ செட் புக் செய்த வழக்கறிஞருக்கு செங்கல் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகில் உள்ள முள்ளக்காட்டில் வசிக்கும் வழக்கறிஞர் செல்வகுமார். இவர் பிரபல ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் கடந்த 1ஆம் தேதியன்று கார் ஆடியோ செட் வாங்க முன்பதிவு செய்துள்ளார். இதை கேஷ் ஆன் டெலிவரி முறையில் பணம் கொடுத்து பொருளை பெற்றுக் கொள்ள அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி அந்த ஆன்லைன் நிறுவனம் தனியார் குரியர் மூலம் பார்சல் ஒன்றை அனுப்பி உள்ளது. அதை செல்வகுமார் ரூ.5000 செலுத்தி வாங்கிக் கொண்டுள்ளார். அந்த பார்சலை பிரித்த போது அதில் கார் ஆடியோ செட் காணப்படவில்லை. அதற்கு பதிலாக செங்கள் ஒன்று இருந்துள்ளது. அந்த செங்கலில் இந்தி எழுத்துக்கள் காணப் பட்டுள்ளன.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் குரியர் நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். குரியர் நிறுவனம் சரியாக பதில் அளிக்காததால் அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். காவல் துறையினர் அந்த குரியர் நிறுவனத்தை சேர்ந்தவர்களை அழைத்ஹ்டு விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அந்த குரியர் நிறுவனம் ரூ. 5000 ஐ திருப்பிக் கொடுத்து விட்டனர். தாங்கள் ஆன்லைன் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுக்கொள்வதாகவும் வழக்கு பதிய தேவை இல்லை எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். செல்வகுமார் அதற்கு ஒப்புக் கொண்டதால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை.