டில்லி

ர்னிச்சர் வாங்க விரும்பிய தொழிலதிபரிடம் மொபைல் மூலம் விவரங்கள் திருடப்பட்டு ஆன்லைன் மூலமாக ரூ.2.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

பணமோசடி என்பது எங்கு எந்த வடிவிலும் நடக்கும் என்பது தற்போது அனைவரும் அனுபவித்து வரும் உண்மை ஆகும்.   இதனால் கவனத்துடன் இருக்க வேண்டும் என்னும் அறிவுரை பரவலாக சொல்லப்பட்டாலும் ஒரு சில சலுகைகள் மற்றும் விலைக் குறைவைக் காட்டி ஏமாற்றி மோசடி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டில்லியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனது அலுவலகத்துக்கு பர்னிச்சர் வாங்குவதற்கான ஆன்லைன் விற்பனை தளம் ஒன்றினுள் நுழைந்துள்ளார்.    அதில் இருந்த ஒரு விளம்பரத்தால் கவரப்பட்ட அந்த தொழிலதிபர் அந்த விற்பனையாளரை தொடர்பு கொண்டுள்ளார்.    அந்த விற்பனையாளர் தம்மை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என அறிமுகம் செய்துக் கொண்டுள்ளார்.

உடனடியாக தொகையை செலுத்தினால் தாம் மற்ற்வர்களை விட மிகவும் குறைந்த விலைக்கு பர்னிச்சர்கள் அளிக்க தயாராக உள்ளதாக அந்த விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.   அதற்கு தொழிலதிபர் ஒப்புக் கொள்ளவே ஒரு எஸ் எம் எஸ் வந்துள்ளது.  அந்த மெசேஜில் யுபிஐ மூலம் பணம் செலுத்தவும், எனவும் பணம் வெற்றியுடன் மாற்றப்பட்டது எனவும் வார்த்தைகள் இருந்துள்ளன.

தொழிலதிபர் அந்த வாக்கியங்களை தொட்டதும் விற்பனையாளருக்கு இவருடைய மொபைலை அங்கிருந்தே இயக்கும் உரிமம் கிடைத்துள்ளது.   இந்த உரிமம் மூலம் விற்பனையாளர் மொபைலில் உள்ள வங்கிக் கணக்குகள், தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் என முழுவதையும் இயக்க அனுமதி கிடைத்துள்ளது.

இதை வைத்து அந்த விற்பனையாளர் என தன்னை சொல்லிக் கொண்டவர்  தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் மோசடி செய்துள்ளார்.  அதன் பிறகு விவரம் அறிந்த தொழிலதிபர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.  சைபர் கிரைம் பிரிவினர் அந்த ஏமாற்றுப் பேர்வழியை தேடி வருகின்றனர்.

சைபர் காவல்துறையினர், “ஒருவர் மிகக் குறைந்த விலையில் பொருட்கள் அளிக்கும் போது அதை நம்பி விடக் கூடாது.   அதில் மோசடிகள் இருக்க வாய்ப்பு உண்டு.   உங்களுக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் அனுப்பப்படும் எந்த ஒரு எஸ் எம் எஸ் செய்தியையும்  திறக்க வேண்டாம்” என எச்சரித்துள்ளனர்.