ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் சூத்தாட்டங்களில் பணத்தை பறிகொடுத்தவர்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்கும் வகையில் அக்டோபர் 19 ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பலமாதங்கள் கிடப்பில் போடப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்து மார்ச் 9 ம் தேதி திரும்ப அனுப்பியதை அடுத்து அரசியல் அரங்கில் இது பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதனையடுத்து மார்ச் 23 ம் தேதி திருத்தங்களுடன் கூடிய மற்றொரு தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணி தேர்வு எழுத உள்ள மாணவர்களிடம் பேசிய ஆளுநர், “ஆளுநர் ஒரு மசோதாவை நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருந்தால் அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம்” என்று பேசினார்.
இருந்தபோதும், எத்தனை நாட்கள் கிடப்பில் இருந்தால் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்வது, ஆளுநரிடம் இருந்து நிராகரிப்புக்கான காரணம் வரும்முன்னரே மற்றொரு தீர்மானம் நிறைவேற்றலாமா, அல்லது நிராகரிப்புக்கான காரணத்தைப் பொறுத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது குறித்து எந்த ஒரு விளக்கமும் அளித்ததாகத் தெரியவில்லை.
ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த பேச்சு சர்ச்சையானதை அடுத்து ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதா மீது முடிவெடுக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களில் ஆன்லைன் ரம்மி மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நடைமுறைப்படுத்த ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் அதிகாரியை நியமனம் செய்ய உள்ள அரசு தடைசெய்யப்பட்ட சூதாட்டங்கள் குறித்த விவரங்களையும் விரைவில் வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தடையை மீறும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரம் செய்தால் 1 ஆண்டு சிறை அல்லது ரூ. 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தடைசெய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடும் நபர்களுக்கும் 3 மாதம் சிறை அல்லது ரூ. 5000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு நீண்ட போராட்டத்திற்குப் பின் ஆளுநரின் ஒப்புதல் கிடைத்திருப்பதை அடுத்து மத்தியில் ஆளும் பாஜக தொடர்புடைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
அதேவேளையில், ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து ஏப்ரல் 12 ம் தேதி திமுக தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது திமுக-வினரிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.