சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச் சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது, ஆண்டார்குப்பம். இங்கே கோயில் கொண்டிருக்கிறார் முருகன். இவரை தரிசித்து வழிபட்டால் பதவி யோகம் வாய்க்கும் என்பது பெரியோர் வாக்கு.

ஒருமுறை, சிவபெருமானைத் தரிசிக்க கயிலை மலைக்கு வந்த பிரம்மதேவன், வழியில் முருகப்பெருமான் இருப்பதைக் கவனிக்காமல் சென்றுகொண்டிருந்தார். அதிகாரத் தோரணையுடன் அவரை அருகில் அழைத்த முருகப்பெருமான், பிரணவத்துக்குப் பொருள் கூறுமாறு கேட்டார். அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் பிரம்மதேவன் திணறியதும், அதனால் கோபம் கொண்டு முருகப்பெருமான் பிரம்மனின் தலையில் குட்டி சிறையில் அடைத்த திருக்கதையும் நாமறிந்ததே.

அப்படி, பிரம்மனிடம் கேள்வி கேட்ட அதிகாரத் தொரணையுடன் இடுப்பில் கரங்களை வைத்து கம்பீரமாக நிற்கும் திருக்கோலத்தில் முருகப்பெருமான் அருளும் கோயில் இது. ஆகவே, இங்கு வந்து அவரைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு அதிகாரம் மிகுந்த பதவிகள் வாய்க்கும், ஏற்கெனவே பதவியில் உள்ளோருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

அதேபோல், சம்வர்த்தனர் என்ற பக்தருக்காகவே முருகன் இங்கே கோயில் கொண்டார் என்றும், அந்தப் பக்தருக்காக பாலநதி எனும் தீர்த்தத்தை இங்கு ஏற்படுத்தினார் என்றும் தலபுராணம் விவரிக்கிறது.

அலங்கார கோலத்தில் மூலவர் முருகப்பெருமானைத் தரிசிக்கும்போது, காலை வேளையில் பாலனாகவும், நண்பகலில் வாலிபனாகவும் மாலையில் வயோதிகனாகவும் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

“அந்நியருக்கும் அருளியவர் இந்த ஆண்டவன்” எனச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். ஆமாம்! ஒரு முறை இந்தப் பகுதி வழியே படைநடத்திச் சென்ற சுல்தான் ஒருவன், இந்த முருகனைத் தரிசிக்க வந்த அடியார்களிடம் தனக்காகவும் பிரார்த்திக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டானாம். அவர்களும் சுல்தானுக்காக முருகனிடம் பிரார்த்தித்துக்கொள்ள, அவரருளால் போரில் வெற்றி கிடைத்ததாம் சுல்தானுக்கு.

அதற்கு நன்றிக்கடனாக சுல்தான், முருகனுக்குக் கோயில் எழுப்ப நிலம் வழங்கியதாக சரித்திரத் தகவல்கள் சொல்கின்றன. மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரில், நடுகல் அமைப்பில் பிரம்மனின் சிற்பம் திகழ்கிறது; பிரம்மதேவன் எக்காலமும் தனக்கு ஆணவம் தலைதூக்கக்கூடாது எனும் பிரார்த்தனையுடன் முருகனை தியானித்துக்கொண்டிருப்பதாக ஐதீகம்.

அருணகிரிநாதர், வாரியார் ஸ்வாமிகள், பாம்பன் ஸ்வாமிகள் ஆகியோரும் இந்தத் தலத்து முருகனைப் போற்றி வழிபட்டுள்ளார்கள்.

இப்படி, அற்புத மகிமைகளோடு அழகன் முருகன் அருள்பாலிக்கும் இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து மூன்று வெள்ளி அல்லது செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வந்து, நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபட, பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பரணி நட்சத்திர நாளன்று கோயிலுக்கு வந்து, அன்றிரவு அபிஷேக – ஆராதனைகளை தரிசித்து, அங்கேயே தங்கி மறுநாள் கிருத்திகை வழிபாடுகளையும் தரிசிக்க… சிக்கலான வாழ்க்கைப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்.