சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  மசோதா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல், அதிமுக வெளிநடப்பு செய்தது. அதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

முன்னதான ஆன்லைன் விளையாட்டு தடை மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  மாநில பிரச்னைகளில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று கூறியதுடன்,  ஆன்லைன் ரம்மியால் 41 பேர் உயிரிழந்துள்ளனர்; கனத்த இதயத்துடன் சட்டமன்றத்தில் நிற்கிறேன்: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. மக்களை காப்பதே அரசின் கடமை; இனியொரு உயிர், ஆன்லைன் ரம்மியால் பறிபோகக் கூடாது எனவும் கூறினார்.

இதையடுத்து, ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா மீது கட்சியினர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசும்போது,  ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாயுள்ளத்தோடு கொண்டு வரப்பட்டுள்ளது. சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் சொல்வதை ஏற்க முடியாது. ஆன்லைன் சூதாட்டம் நடத்துகிற உரிமையாளர்களை ஆளுநர் ஏன் சந்திக்க வேண்டும்? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்ததில் உள்நோக்கம் இருக்குமோ என சந்தேகிக்கிறேன். தமிழ்நாடு ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என பேரவையில் வேல்முருகன் வலியுறுத்தினார்.

 கொ.ம.தே.க. ஈஸ்வரன் பேசும்போது,  ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பது படிக்காத பாமர மக்கள் கூட ஏற்கும் கோரிக்கை என்று கொ.ம.தே.க. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி என்பது ‘கேம் ஆஃப் சான்ஸ்’தானே தவிர, ‘கேம் ஆஃப் ஸ்கில்’ அல்ல. செஸ் மற்றும் கோல்ஃப் விளையாட்டை போன்றது அல்ல ஆன்லைன் ரம்மி. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது. மீண்டும் இதை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது. ஆனால் மறுபடியும் தாமதிப்படுத்தினால் என்ன செய்வது?. மசோதாவை திருப்பி அனுப்புவது என்பது ஒட்டுமொத்த பேரவையையும் அவமதிக்கும் வகையில் ஈஸ்வரன் உள்ளது எனவும் ஈஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது, கடந்த ஆண்டு  அக்டோபரில் அவசர சட்டமாக சூதாட்ட தடைச் சட்டம் அனுப்பியபோது ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்தார். அதையே சட்ட முன்வடிவாக கொண்டு வந்த போது, சில மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பியிருக்கிறார். சட்டமன்றம் நிறைவேற்றிய சூதாட்ட தடை மசோதா பரிசீலனையில் இருக்கும்போது, ஆன்லைன் ரம்மி நடத்துவோரை ஆளுநர் சந்தித்திருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநர் சொன்ன அனைத்து காரணத்துக்கும் முதலமைச்சர் முன்னுரையில் பதில் அளித்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறை உடையவராக இருந்திருந்தால் ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பார் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

பாமக எம்எல்ஏ  ஜி.கே.மணி பேசும்போது,  முதலமைச்சரின் பேச்சு அரசியல் பண்பையும், ஆளுநர் பதவி மேல் உள்ள மதிப்பையும் காட்டுகிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பி சட்டப்பேரவை மாண்பை கொச்சைப்படுத்தியுள்ளார் ஆளுநர். ஆளுநர் காலம் தாழ்த்தியது மிகப்பெரிய உள்நோக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

விசிக சார்பில்,  ஆளூர் ஷாநவாஸ் பேசும்போது, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை விரிவான ஆய்வுக்கு பிறகே முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார் என்று  கூறியவர், பொதுமக்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பிறகே மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்டங்களை நடத்தும் நிறுவனங்களிடம் கருத்து கேட்டுள்ளார். திமுக அரசு சட்டப்படி செயல்படுகிறது; ஆனால் ஆளுநரோ அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து மீறி வருகிறார். பேரவையில் ஆளுநருக்கான அனைத்து மரியாதையும் மரபுப்படி வழங்கப்படுகிறது; ஆனால் பேரவையிலேயே மரபுகளை மீறுகிறார். ஆளுநர் அதிகாரம் சட்டப்படி வரையறுக்கப்பட்டுள்ளது; ஆனால் அவர் அதை தொடர்ந்து மீறுகிறார். அனைத்து நெறிமுறைகளையும் ஆளுநர் மீறியிருக்கிறார். ஆளுநர் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும். ஆளுநரின் நியமனங்களில் மாநில அரசின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

பாஜக தரப்பில் நயினார் நாகேந்திரன் பேசும்போது, ஆளுநரின் மீதான விமாசனம் குறித்தும், மத்தியஅரசின் உரிமை குறித்தும் பேசினார்.  இது சலசலப்பை ஏற்படுத்திது.  அப்போது சபாநாயகர் அப்பாவு,  ஆளுநரை தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சிக்கவில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஆளுநரை விமர்சிக்கும் உரிமை பேரவைக்கு உண்டு என்று  அவைத்தலைவர் துரைமுருகன் கூறினார். ஆளுநர் செய்தது பெரிய தவறு என்பதை எடுத்துரைத்து விமர்சிக்க அனைத்து உரிமைகளும் உள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிலுவையில் வைத்துள்ளதால் ஆளுநரை விமர்சிக்கும் உரிமை பேரவைக்கு உண்டு. அவர் ( நயினார் நாகேந்திரன் ) இருக்கும் கட்சிக்கு அவர் அப்படிதான் பேசுவார்; அதை விட்டுவிட வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்தார்.

அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேச அப்பாவு அழைப்பு விடுத்தார். அவர் பேசும்போது, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அதிமுக சார்பில் வரவேற்பதாக தெரிவித்தார். இதற்கு எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவராக நான் இருக்கிறேன்; ஒரு கட்சிக்கு ஒருவர் என பேசக்கூறியுள்ளீர்கள். ஆனால், பெரும்பான்மை இல்லாதவரை பேச வைப்பது என்ன நியாயம். ஓ.பன்னீர் செல்வத்தை பேச அனுமதித்ததற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

முக்கிய மசோதா என்பதால் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பேச வாய்ப்பு அளித்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து,  ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், அதிமுக வெளிநடப்பு செய்தது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக சார்பாக பேச அனுமதி கொடுத்த சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேறியது. அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.