சென்னை: ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த தடை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதன் காரணமாக மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் தற்கொலை முடிவை எடுத்து வரும் அவலங்கள் தொடர்கின்றன. இதனால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியவர், ஆன்லைன் சூதாட்டம் குறித்த எந்த சட்டமும் தமிழகத்தில் இதுவரை இயற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது; உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று தெரிவித்தார்.