5 அடி கனம் கொண்ட சுவரை தாண்டி ஆதார் தரவுகள் கசிவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நம்பிக்கையில் இந்தியர்கள் இறுமாந்து இருக்கும் நிலையில் அவர்களது வங்கியில் இருக்கும் பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவத்தில் வீட்டு பத்திரம் பதிவு செய்த போது பத்திரப்பதிவுத் துறையில் கொடுக்கப்பட்ட கைரேகையை வைத்து வங்கியில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
ஆதார் கட்டண செயல்முறை (Aadhar-Enabled Payment System – AEPS) வங்கி கணக்கு மூலம் கொள்ளை நடைபெற்று இருப்பது சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
பத்திரப்பதிவுத் துறை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள கைரேகைகளை பட்டர் பேப்பர் மூலம் பிரதி எடுத்து அதனுடன் உள்ள ஆதார் எண்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை இந்த சைபர் கிரிமினல்கள் முதலில் உறுதி செய்கிறார்கள்.
வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதாருக்கான கைரேகையை வைத்து ஆதார் கட்டண செயல் முறை (AEPS) கணக்கை துவக்கும் இந்த ஹேக்கர்கள் அதன்பின் அந்த கணக்கில் இருக்கும் பணத்தை வழித்து எடுத்துவிடுகின்றனர்.
இதுவரை சுமார் 400 பேரிடம் இருந்து இதுபோன்ற புகார்கள் வந்துள்ள நிலையில் 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்களுக்கு புகார் அளித்த ஒரு சிலரின் பணம் மட்டுமே பகுதியளவு மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லட்சங்களில் தான் என்று இல்லாமல் நூறு ரூபாய்களைக் கூட விட்டுவைக்காத இந்த கொள்ளையர்கள் சிறு துளி பெருவெள்ளமாய் நூதன முறையில் கொள்ளையடிக்கின்றனர். இந்த குற்ற எண்ணிக்கையில் ஆயிரங்களை இழந்தவர்களின் புகார்கள் கடலில் கரைத்த பெருங்காயமாக இருக்கிறது.
இந்த ஹேக்கர்கள் தங்கள் செயல்முறையை நபருக்கு நபர் நாளுக்கு நாள் மாற்றிக்கொள்வதாலும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து செயல்படுவதாலும் இவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சைபர் கிரைம் போலீசார் இவர்களிடம் இருந்து விழிப்புடன் இருப்பது மக்களின் கடமையாக இருப்பதாக உணர்த்துவதோடு உபயோகத்தில் இல்லாத ஆதார் கட்டண செயல் முறை (AEPS) கணக்குகளை முடக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆதார் அட்டை வழங்குவது ஒரு பயனற்ற திட்டம் என்று கூக்குரல் இட்ட கோஷ்டி 2014 க்குப் பின் பொதுக்கழிப்பிட பயன்பாடு தவிர மற்ற அனைத்து பயன்பாட்டுக்கும் ஆதாரை இணைப்பதன் மூலம் கருப்பு பணத்தையும் கள்ளச் சந்தையையும் ஒழித்துவிட்டதாக கைகொட்டி சிரித்து வருகிறது.
தங்கள் வங்கிக்கணக்கில் லட்சக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று ஏமாந்து வங்கி கணக்கு துவக்கிய சாமானியர்கள் பலரும் தாங்கள் வைத்திருந்த சொற்ப பணத்தையும் அற்பர்களின் ஆனந்த வாழ்வுக்காக இழக்க வேண்டிய நிலைமையை ஆதார் இணைப்பு ஏற்படுத்தி தந்துள்ளது.
கொரோனா கால ஊரடங்கு, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு அறிவிப்புகள் போல ஆதார் இணைப்பு திட்டங்களும் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு வருகிறது,
இது, பல்வேறு வகையில் மக்களை ஏமாற்ற சைபர் கிரிமினல்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தந்து இருக்கிறது. அதிகரித்து வரும் சைபர் குற்ற எண்ணிக்கைகள் மூலம் இது தெரிகிறது.
பத்திரப்பதிவுத் துறை மூலம் நடைபெற்றுள்ள இந்த நூதன கொள்ளை குறித்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை வைக்க காத்திருக்கும் மக்கள் சைபர் குற்றங்களை தடுக்க கட்டணமில்லா தொலைபேசி எனும் உதவாக்கரை திட்டங்கள் மட்டும் போதாது என்று அங்கலாய்த்து வருகின்றனர்.