காந்திநகர்: குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 158 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.. இதன் காரணமாக குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தைப்போல ஆட்சியை பிடிப்போம் என்று சவால் விட்ட ஆம்ஆத்மி பெருந்தோல்வி அடைந்துள்ளது.

182 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட குஜராத்தில் கடந்த 1 மற்றும் 5-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த சட்டமன்ற  தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும். வாக்கு பதிவு சதவீதம் எண்ணிக்கை குறைந்ததால் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு நாடுமுழுவதும் ஏற்பட்டது. மேலும் ஆம்ஆத்மி கட்சி பஞ்சாப் போல பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், பாஜக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், 7வது முறையாக பாஜக மீண்டும் குஜராத்தில் ஆட்சி அமைக்கிறது.

காலை 8மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே, பாஜக முன்னிலை பெற்று வருகிகிறது. காலை 9 மணிக்கே, 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலை வகித்தது. தொடர்ந்து அதன் முன்னிலை விவரம் அதிகரித்துக்கொண்டே வந்தது.

மாலை 3.30 மணி நிலவரப்படி, பாஜக 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

182 தொகுதிகளில் இதுவரை 82 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக 71 இடங்களிலும் ஆம்ஆத்மி 1 இடத்திலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய நிலையில், 158 இடங்களில் பாஜகவும், 16 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 4 இடங்களில் ஆம்ஆத்மி கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன.

பஞ்சாபில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆம்ஆத்மி, குஜராத்தில் செல்லாக்காசாகி உள்ளது. கடந்த தேர்தலை விட அதிக இடங்களை பிடித்து பாஜக  7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அதிரடியை நிகழ்த்தி உள்ளது.