டெல்லி-
கோடி கணக்கில் ஏமாற்றியவரை விட்டுவிட்டு சேலை திருடியவரை ஒரு வருடம் சிறையில் வைத்திருப்பதா என தெலங்கானா அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த எலியா என்பவர் 5 சேலைகளை திருடியதாக அம்மாநில போலீசார் ஒரு வருடத்திற்கு முன்பு அவரை கைது செய்து சிறையில் விசாரணையின்றி வைத்து உள்ளனர். தனது கணவரை சிறையில் ஒரு ஆண்டுகாலம் விசாரணையின்றி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எலியாவின் மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹெர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியவர் மகிழ்ச்சியாக வாழந்துகொண்டிருக்க, 5 சேலையை திருடியவரை சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கோடி கணக்கில் ஏமாற்றியவர்களை விட்டுவிட்டு சேலை திருடியவரை ஒரு வருடம் சிறையில் வைப்பதா என விஜயமல்லையாவை பெயர்குறிப்பிடாமல் சுட்டிக்காட்டி தெலுங்கானா போலீசை விமர்சித்து உள்ளது.
இது தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 8-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆந்திர அரசின் ஆபத்தான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 சேலைகளை திருடிய எலியா கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.