டில்லி,
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஜூலை 4ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் நீட் தேர்வை மத்திய கல்வி வாரியம் செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு முடிவு அடிப்படையிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான தேர்வு முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் நீட் தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில், தமிழக சட்டப் பேரவையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசும், குடியரசு தலைவர் இன்றுவரை ஒப்புதல் கொடுக்காததால், இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் மருத்துவம் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து ஒரு ஆண்டு விலக்கு கோரி, தமிழகத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் உச்ச நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரி இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை ஜூலை 4ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.