2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை திமுக துவக்கியுள்ளது.
திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து விரைவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் விருப்பமனுவுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 19 ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
திமுக-வினரின் விருப்ப மனுக்கள் மார்ச் 1 முதல் 7 வரை பெறப்பட உள்ள நிலையில் மார்ச் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து பணியாற்றிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அதன் தலைவர் கமலஹாசன் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கமலஹாசனுக்கு கோவை அல்லது சென்னையின் மூன்று மக்களவை தொகுதியில் ஏதாவது ஒன்று ஒதுக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுவதை தனது முதல் விருப்பமாக கமலஹாசன் தெரிவித்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் இங்கு ஏற்கனவே திமுக-வின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம்.பி.யாக உள்ளதால் திமுக வசம் உள்ள சென்னையின் மூன்று தொகுதிகளில் ஒன்றை வழங்க திமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.