2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குழு பரிந்துரைத்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, லோக்சபா, மாநில சட்டசபைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, கடந்த 191 நாட்களாக பல்வேறு தரப்பினருடன் நடத்திய ஆலோசனையின் முடிவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்தது.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ராஷ்டிரபதி பவனில் திரௌபதி முர்முவை சந்தித்தது. அப்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார். இந்தக் குழு, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான தனது அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான உயர்மட்டக் குழு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு இரண்டு கட்ட அணுகுமுறையை பரிந்துரைத்துள்ளது. முதல் கட்டமாக, மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என கமிட்டி அறிக்கை கூறியுள்ளது. இதன்பிறகு, 100 நாட்களுக்குள் இரண்டாம் கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தலாம் என்று கூறியுள்ளது/
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான உபகரணங்கள், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு குழு பரிந்துரைத்தது. இதனுடன், மக்களவை, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்காக மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, ஒரே வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் தயாரிக்கவும் பரிந்துரைத்துள்ளது.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை 2024 பொதுத்தேர்தலுக்குப் பிறகு, அதாவது 2029ல் நடைமுறைப்படுத்த இந்த உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.
தவிர, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்களில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தவும் பரிந்துரைத்துள்ளனர்.