சென்னை:  “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக மற்றும்  4 மாநில முதல்வர்கள் வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் பாஜக ஆதரவு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

பண விரயத்தையும், நேர விரயத்தையும், ஊழியர்களின் பணிச் சுமையையும் குறைக்கும் வகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்கிற பிரசாரத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க. முன்னெடுத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமா என்பது குறித்து ஆராய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருக்கிறது.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அப்போது மற்ற மாநிலங்களுக்கும் தேர்தல் வருமா? சில மாதங்களுக்கு முன்னர் தான் சில மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்தன. ஐந்து மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெற உள்ளது. அவர்களது ஆட்சிக்காலம் என்னவாகும்? என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், மத்தியஅரசின் அறிவிப்புக்கு  பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களான  அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களின் முதல்வர்கள் வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்கள். அதுபோல அதிமுகவும் வரவேற்பு தெரிவித்து உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மூலம் நமது நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும். அரசியல் ஸ்திரமின்மையை தவிர்க்கும் என்றும்,  நேரமும், பெரும் செலவும் மிச்சப்படுத்தப்படும். கொள்கைகளை திறம்பட செயல்படுத்த இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும். முன்னாள் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக வலுவான மற்றும் விரைவான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதுபோல, பாஜக ஆதரவு எம்.பி.யான,  தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சி தலைவரான  ஜிகே வாசனும் ஆதரவு தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றம்‌ மற்றும்‌ சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில்‌ தேர்தல்‌ நடக்கும்‌ போது பொதுச்‌ செலவினங்கள்‌ குறையும்‌, சேமிப்பு கூடும்‌, மற்றும்‌ நாட்டின்‌ பாதுகாப்பு படைகளை உகந்த முறையில்‌ பயன்படுத்த இத்திட்டம்‌ பயனளிக்கும்‌ என்று பாஜக கூறிவருவதை ஜிகே வாசன் வழிமொழிந்துள்ளார். நமது தேசம்‌ எப்பொழுதும்‌ தேர்தல்‌ நினைவிலேயே உள்ளது. மேலும்‌ ஏதாவது ஒரு மாறிலத்தில்‌ எல்லா நேரங்களிலும்‌ மாறி, மாறி தேர்தல்‌ நடைபெற்றுக்‌ கொண்டு இருக்கிறது. இது நிர்வாகத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. மேலும்‌ மத்திய மற்றும்‌ மாநில நலன்களின்‌ திட்டமிடலை தாமதப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா சுதந்திர பெற்று 77ஆம்‌ ஆண்டில்‌ அடியெடுத்து வைக்கும்‌ இந்த வேலையில்‌, இந்தியாவை வருகிற 2047ஆம்‌ ஆண்டிற்குள்‌ வளர்ந்த நாடாக மாற்றுவதை பாரதப்‌ பிரதமர்‌ தனது பணியாகக்‌ கொண்டுள்ளார்‌. இந்த நிலையில்‌ நாம்‌ அனைவரும்‌ தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நிர்வாகத்தில்‌, நீண்ட கால திட்டத்தில்‌ கவனம்‌ செலுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். ஆளும்‌ கட்சியும்‌, எதிர்க்‌ கட்சிகளும்‌, மக்களின்‌ நலன்களில்‌ மட்டுமே கவனம்‌ செலுத்தி, நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்ல ஒரே நாடு, ஒரே தேர்தல் தேவை என்று கூறியுள்ள ஜிகே வாசன் இத்திட்டத்தால்‌ அனைத்து கட்சிகளும்‌, நாட்டின்‌ வளர்ச்சியில்‌ முழு கவனம்‌ செலுத்த முடியும்‌ என்கிறார்.

இந்த விவகாரத்தில்‌ அனைத்து கட்சிகளுடன்‌ ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த முயற்சியை தமிழ்‌ மாநில காங்கிரஸ்‌ முழு மனதுடன்‌ வரவேற்கிறது என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் தேவை. இது பாராட்டத்தக்க நடவடிக்கை. தேர்தல்களை பிரித்து நடத்துவதால், தேர்தல் காலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதிலும், புதிய கொள்கைகளை முன்னெடுப்பதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்றங்களின் தேர்தலையும் இணைத்து நடத்த வேண்டியது மிகவும் அவசியம். இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு உ.பி. மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் ஷர்மா கூறுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழு அமைத்திருப்பது பிரதமர் மோடியின் மிக முக்கிய முடிவு. பல்வேறு தேர்தல்களை நடத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் காலமாகவே இருக்கிறது. இதன் காரணமாக வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படுகிறது.பிரதமர் மோடி இதை சரியாக உணர்ந்து சரியான முடிவை எடுத்திருக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலை வரும்போது இந்தியாவின் வளர்ச்சி வேறு வடிவத்தில் இருக்கும். செலவும் குறையும். அமிர்த காலத்தில் நாட்டுக்கு பிரதமர் மோடியால் கொடுக்கப்பட்ட ஒரு சிறந்த பரிசு இது. இந்த துணிச்சலான முடிவை எடுத்ததற்காக அஸ்ஸாம் மக்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

 மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தல்களுக்கான செலவை இது பெருமளவில் மிச்சப்படுத்தும். அவ்வாறு சேமிக்கப்படும் பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்காக செலவிட முடியும். பிரதமர் மோடியின் இந்த முடிவால், அவர் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அவரை மீண்டும் பிரதராக்க வேண்டும் என்ற முடிவை மக்கள் எடுத்துவிட்டார்கள்” என்று தெரிவித்தார்.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “நாட்டின் வளர்ச்சி பற்றியே பிரதமர் மோடி எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் நாடு முன்னேறும். இதை உத்தரகண்ட் வரவேற்கிறது” என்று கூறியிருக்கிறார்.