சென்னை: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அமமுக அமைப்புச் செயலாளர் பாளை து.அமரமூர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி இன்று ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார்.

முன்னாள் எம்எல்ஏவான பாளை அமரமூர்த்தி கடந்த சில ஆண்டுகளாக டிடிவி கட்சியான அமமுகவின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அமமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார். முன்னதாக அவர், காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார். பின்னர் அங்கிருந்து விலகி டிடிவியுடன் இணைந்து பணியாற்றி வந்த நிலையில், கட்சி தலைமைமீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அங்கிருந்து விலகி இன்று திமுகவில் ஐக்கியமானார்.

தனது ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோருடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த பாளை முர்த்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து, திமுகவில் இணைந்தார்.  அவருடன்  10க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஏற்கனவே தங்கத்தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி என பலர் விலகி திமுகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது பாளை அமரமூர்த்தியும் அங்கிருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.